Saturday, 24 March 2012

வாழ்வின் கடைசி எல்லை வரை சென்று வார்த்தெடுத்த வரிகள் – கோச்சடையான் பாடல் குறித்து வைரமுத்து


வாழ்வின் கடைசி எல்லை வரை சென்று வார்த்தெடுத்த வரிகள் – கோச்சடையான் பாடல் குறித்து வைரமுத்து

எதிர்ப்பார்த்த மாதிரியே, கோச்சடையான் படத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினி தன் குரலில் பாடிய பாடல் குறித்து, அதை உடனிருந்து பார்த்து, கேட்டு ரசித்த கவிஞர் வைரமுத்து அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார், ஆனந்த விகடனில்.
அந்தக் கட்டுரை:

... ‘கோச்சடையான்’ ஜுரம் ஆரம்பம்! படத்துக்காக ரஜினியே ஒரு பாடல் பாடியிருக்கிறார். படத்தில் ஐந்து பாடல்களை எழுதியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, பாடல் உருவான கதையும் அதை ரஜினியே பாட நேர்ந்த சூழலையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

”கூர்ந்த வாளும் தேர்ந்த மதியும்கொண்ட ஒரு போர் வீரன் உலகைப் பார்த்துப் பாடும் தத்துவப் பிரகடனமே அந்தப் பாடல். போர்க்கள விழுப்புண்களையும் அனுபவ வடுக்களையும் சுமந்த மாவீரன் கோச்சடையான், தன் வாழ்வின் அனுபவங்களைத் தத்துவார்த்தமாக வெளிப்படுத்துகிறான்.

ஒரு சிறிய வட்டத்துக்குள் செதுக்கிய பாடல் அல்ல இது; வாழ்வின் கடைசி எல்லைவரை சென்று வார்த்து எடுத்த பாடல். மனைவி, மக்கள், வெற்றி, தோல்வி,நண்பன், எதிரி, ஜனனம், மரணம் என்று அனைத்தையும் ஒருசேர உரைக்கும் பாடல்.

பாடல் பதிவுக்கு ரஜினியையும் அழைத்தோம். பாடல் பதிவாகும் கணம் வரை, அந்தப் பாடலை ரஜினிதான் பாடுவார் என்று அவர் உட்பட யாருக்கும் தெரியாது.


எல்லாம் தயாரான பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான்தான் சின்ன சிரிப்போடு, ”நீங்களே இந்தப் பாடலைப் பாடுங்கள் சார்!” என்று ரஜினியிடம் சொன்னார். அவர் அதை முதலில் நம்பவில்லை. ஆனால், அழுத்தம்திருத்தமாக ஏ.ஆர்.ரஹ்மான் வற்புறுத்தவும் மைக் முன் வந்து நின்றார் ரஜினி. எந்த ஒத்திகையும் இல்லா விட்டாலும், எடுத்த எடுப்பிலேயே கம்பீரமாக ஒலிக்கத் தொடங்கியது ரஜினியில் குரல்.

பாடல் வரிகள் சரித்திர கால இலக்கணத் தமிழில் ஒலிக்கும்என்ப தால், என்னை அருகிலேயே இருக்கச் சொன்னார் ரஜினி. தமிழ் உச்சரிப்பில் நான் சொன்ன சின்னச் சின்னத் திருத்தங்களை ஒரு சிறு குழந்தைபோல் ஏற்றுக்கொண்டு ஆர்வமாகப் பாடி முடித்தார்.

‘அபூர்வ ராக’த்தில் ஆரம்பித்த ஆர்வ அடர்த்தி, தொழில் பக்தி, இன்று வரை ரஜினியிடம் குறைந்தபாடு இல்லை!”
ரஜினியின் லகலகலக ரவுண்ட் ஆரம்பம்!
-விகடன்

No comments:

Post a Comment