2011 ஜூன் 13 ஆம் தேதி திங்கட்கிழமை ரஜினி ரசிகர் மன்றங்களின் வரலாற்றில் முக்கியமான நாளாகும். தமிழக வரலாற்றில் முதன் முறையாக ஒரு தனி நபருக்காக சர்வ மதங்களை அடக்கிய கூட்டு பிரார்த்தனை ஒரே நேரத்தில் நடைபெற்றது. அதுவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்.
கூட்டு பிரார்த்தனையை ஏற்பாடு செய்த தஞ்சை மாவட்ட தலைமை மன்றம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமை ரஜினி மன்றங்களின் சார்பாக ஏற்கனவே ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாலை 4.30 pm மணி முதலே, திலகர் திடலில் ரசிகர்கள் சாரை சாரையாக குவிந்த வண்ணமிருந்தனர். மன்றப் பிரமுகர்கள் பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். ஆகையால் பெண்கள் கூட்டமும் இருந்தது. தவிர பொதுமக்களும் திரண்டிருந்தனர்.
ரசிகர்கள் பலர் வேன் மற்றும் கார்களில் வந்திருந்தனர். பிரார்த்தனைக்கான ஏற்பாடுகள் கூடுமானவரை எளிமையாக செய்யப்பட்டிருந்தது.
மும்மதங்களின் சார்பாக பிரார்த்தனை நடைபெற்றபோது அந்தந்த மதத்தினர் தலைவர் குறித்த தங்கள் கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறினர்.
“இது எங்கள் நன்றிக் கடன்” – திரு.லியாகத் அலி
இஸ்லாமிய மதம் சார்பாக பிரார்த்தனைக்கு வந்திருந்த திரு.லியாகத் அலி அவர்கள் கூறும் போது, “1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தினரும் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட ஒரு இக்கட்டான நேரத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் எமக்காக பரிந்து பேசி, எங்கள் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க முற்பட்டது எங்களுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த நன்றிக்காகத்தான் எங்கள் சமுதாயத்தின் சார்பாக இன்று அவருக்காக பிரார்த்தனை செய்ய வந்தேன். அவருக்கு ஒரு குறையும் வராது.” என்று கூறினார்.
“அர்த்தமுள்ள ஆன்மீகத்தை பாமரர்களிடமும் கொண்டு சென்றவர் ரஜினி” – ஹிந்து சமுதாயத்தினர்!
ஹிந்துக்கள் சார்பாக பேசிய வரகூர் வெங்கடேஷ், தஞ்சை ராமமூர்த்தி, கணபதி நகர் வெங்கடேஷ் ஆகியோர் பேசியபோது “தமிழத்தில் விபூதி பட்டையும், ருத்ராக்ஷமும் பிரபலமானதே ரஜினி அவர்களால் தான். அவரை பார்த்து பல இளைஞர்கள் விபூதி தரித்தனர், ருத்ராக்ஷமும் அணிந்தனர். தவிர மிகவும் சிக்கலான சின்முத்திரையை (பாபா முத்திரை) பாமரர்களும் புரியும் திரைப் படங்களில் காண்பித்தார். இப்படி பல ஆன்மீக விஷயங்களை மக்களிடம் கொண்டு சென்றதில் ரஜினிக்கு பெரும்பங்குண்டு…!” என்று குறிப்பிட்டார்.
கட்டுக்கோப்பாக நடைபெற்ற இந்த பிரார்த்தனை ரசிகர்கள் மத்தியில் தலைவரின் உடல் நலம் குறித்த ஒரு பாசிட்டிவான அலையை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. தஞ்சை நகர் முழுக்க இரண்டு நாட்களாக இதே பேச்சு தான்.
தனிப்பட்ட அலுவல் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு சில மாவட்ட தலைவர்கள் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்றபடி அனைத்து மாவட்ட தலைவர்களும் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். பொதுமக்களும் கலந்துகொண்டு பிரார்தித்தனர்.
மும்மதங்களை குறிக்கும் விதமாக மேடையின் BACKGROUND டிசைன் செய்யப்பட்டிருந்தது பொருத்தமாக இருந்தது.
பிரார்த்தனை முழு நிகழ்வு மற்றும் பங்கேற்றோர் விபரங்கள் குறித்து அனைத்து மாவட்டங்களின் சார்பாக தஞ்சை மாவட்ட தலைமை மன்றம் நமக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
டைப் செய்ப்பட்ட அந்த அறிக்கையின் எழுது வடிவம் இதோ உங்களுக்காக…
——————————————————————————————–
அனைத்து ரஜினி மன்ற மாவட்ட தலைவர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்ற சர்வ மத கூட்டு பிரார்த்தனை!
பிரார்த்தனை சரியாக 7.00 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தஞ்சை மாவட்ட தலைமை மன்றத் தலைவர் ரஜினி கணேசன் தலைமையில், மற்ற மாவட்ட தலைவர்கள் நாகை ரஜினி பாஸ்கர், திருச்சி சாகுல் ஹமீது, கடலூர் பெரியசாமி, விழுப்புரம் இப்ராஹிம், திருவண்ணாமலை சண்முகம், விருதுநகர் முருகன், திருவாரூர் தாயுமானவன், புதுக்கோட்டை குணா, ராமநாதபுரம் பாலனமச்சிவாயம், கரூர் ராஜா, கோவை உலகநாதன், திருப்பூர் சதீஷ், சிவகங்கை ஜெ.பி.ரவி, தேனி சிவா, தருமபுரி செந்தில், உதகை மூர்த்திக்குமார், பெரம்பலூர் சன்முகதேவன், சேலம் பழனிவேல், புதுவை கோபி, மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் தஞ்சை நகர் மன்றத் தலைவர் ஒய்.ஜெயின் வரவேர்புரையிலும் கூட்டு பிரார்த்தனை துவங்கியது.
முதலில் கிறிஸ்தவ முறைப்படி துவங்கியது. இயேசு ஜெபராஜ் தலைமையிலான ஜெபமாலை குழுவினர் முதலில் பிரார்த்தனை செய்தனர். பைபிளில் இருந்து வசனம் படிக்கப்பட்டது. பின்னர் கிறிஸ்தவ பாடல்கள் பாடப்பட்டன.
அதனை தொடர்ந்து 7.20 மணிக்கு லியாகத் அலி அவர்கள் தலைமையில் இஸ்லாம் முறைப்படி து.ஆ. செய்யப்பட்டு பிரார்த்தனை துவங்கியது. திருக்குர்ஆன் வாசிக்கப்பட்டது.
அதற்கு பிறகு சரியாக 7.40 க்கு ஹிந்து முறைப்படி பிரார்த்தனை துவங்கியது. வரகூர் வெங்கடேஷ், தஞ்சை ராமமூர்த்தி, கணபதி நகர் வெங்கடேஷ் ஆகியோர் இப்பிரார்த்தனைக்கு தலைமையேற்றனர்.
அதன் பின்னர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அனைவரும் ஒன்று சேர்ந்து 5 நிமிடம் மௌனமான முறையில் பிரார்த்திக்க பிரார்த்தனை நடைபெற்றது.
தலைவர் ரஜினி எந்த வித இன்னலுமின்றி உடல் நலம் பெற்று, நீண்ட ஆயுளுடன், வளமுடனும், அவரை சுற்றியுள்ளவர்களும், அவரை வாழவைத்த தமிழக மக்களும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்து, இனிதே நிறைவு பெற்றது.
இறுதியில் தஞ்சை மாவட்ட துணை செயலாளர் கே.வெங்கடேஷ் நன்றி கூறினார்.
இக்கூட்டு பிரார்த்தனைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தஞ்சை மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் அவர்களால் செய்யப்பட்டு மற்றும் நகர துணை தலைவர் தாய்.வெங்கடேஷ், விருது நகர் சக்திவேல் பாண்டியன், தி.நகர் பழனி, மாறி, ஜோதி, குன்றத்தூர் ராஜ், தாம்பரம் ராமமூர்த்தி, நீலகண்டன், குன்றத்தூர் பிரசாத், ரஜினி பாலு, கோவை வேணுகோபால், சோம சக்திவேல், திருச்சி கலீல், திருவாரூர் ஜின்னா, நாகை குபேந்திரன், மயிலாடுதுறை ராஜேஷ், பவுன் முருகானந்தம், மற்றும் தஞ்சை நகர ஒன்றிய கிளை நிர்வாகிகளும் ரசிகர் மன்றத்தாரும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.
மற்ற நடிகர்களின் ரசிகர் மன்றத் தலைவர்களும் பங்கேற்பு
இவர்களுடன் விஜயகாந்த் மன்ற தே.மு.தி.க. நகர செயலாளர் எஸ்.எஸ்.அடைக்கலம், கமல் ஹாசன் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் தரும.சரவணன், விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் இரா.விஜய் சரவணன், அஜீத் மன்ற மாவட்ட தலைவர் ஈ.வின்சென்ட், சூரியா ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் வாசிம்ராஜா, தனுஷ் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் சரவணன், சிம்பு மாவட்ட தலைவர் கந்த முருகன், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் ரசிகர் மன்றத்தின் சார்பாக விஜய் உள்ளிட்ட பிற நடிகர்களின் மன்றத் தோழர்களும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
இந்த் பிரார்த்தனையில், தலைவர் சிங்கபூரிலிருந்து சென்னை திரும்பும்போது, விமான நிலையத்தில் அவருக்கு அனைத்து மாவட்ட தலைமை மன்றங்களின் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பொழுது தலைவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மனதில் கொண்டு, அருகே செல்லாமல், தள்ளி நின்றே பார்த்து வருவோம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் தெரிவித்தார்.