Tuesday, 31 March 2015

தலைவர்...

எந்த ஒரு கட்சிக்கும் சொந்தக்காரரில்லை. எந்த ஒரு தனிக் கட்சியை மட்டும் ஆதரிக்கவுமில்லை.

இன்றைய தேதியில் தமிழர்களிடத்தில் ‘தலைவர்’ என்று சொன்னால் அது இன்று பிறந்த நாள் கொண்டாடும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மட்டும் தான்.

தானைத்தலைவர், ஆனைத்தலைவர் என்று பலர் இருக்கலாம். ஆனால் அனைத்து தமிழ் மக்களாலும் உலகெங்கிலும் ‘தலைவர்’ என்று அன்போடு உச்சரிக்கப்படுவது ரஜினி ஒருவர் தான்.

தமிழர்களை ஒன்றிணைக்கும் மந்திரச் சொல் ‘ரஜினி’.

அவரது நடிப்பை பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது அரசியல் நிலைப்பாடுகளைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது ரசிகர்களின் ஆரவாரம் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது திரைப்பட வெற்றிகள் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது ஸ்டைல் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது வெளிப்படையான பேச்சு பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவர் தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதினால் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது உறுதியான இறை வணக்கம் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது தமிழ் உச்சரிப்பு பிடிக்காதவர்கள் இருக்கலாம். அடிக்கடி ரசிகர்களை நேரில் சந்திக்காதது பிடிக்காதவர்கள் இருக்கலாம்.

ஆனால், அவரைப் பிடித்தவர்கள் எண்ணிக்கையைக் கூட்டினால் இந்த பிடிக்காதவர்கள் லிஸ்ட் மிகமிகமிக கம்மி தான்!

எல்லோரையும் எல்லாவிதத்திலும் எல்லாராலும் திருப்திப்படுத்தி விடவே முடியாது. பொதுப் பிரச்னையில் கூட ஒன்று பட முடியாது என்று வீம்பு பிடிக்கும் தமிழர்கள் ‘ரஜினி’ என்ற மந்திரச் சொல்லில் மட்டும் கட்டுண்டு இருக்கிறார்கள்.

“ரஜினி இமேஜ் எல்லாம் தமிழ்நாட்டு தமிழர்களிடம் மட்டும் தான்” என்று உலக அளவில் பெயரும் புகழும் அடைந்து விட்டதாக எண்ணிக் கொண்டு சில அல்லு சில்லுகள் வசனம் பேசும் போதெல்லாம் உடலின் சகல பாகங்களிலிருந்தும் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

தமிழ் சினிமா மட்டுமல்ல.. இந்திய சினிமாவின் இன்றியமையாத ஆளுமையாக தலைவர் ‘ரஜினி’ உருவாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன.

அவர் மீது எறியப்படும் அம்புகளையெல்லாம் அவர் மாலைகளாக்கி மறுநாள் தூர வீசி விடுகிறாரோ என்று எண்ணத் தோன்றும் வண்ணம் எதுவுமே நடவாத மாதிரி நடந்து கொள்வது தான் அவரது சிறப்பம்சமே!

அவரது திரைப்படம் வெளியாக இருக்கிறது என்று பேச்சு அடிபடும் நாளிலிருந்தே திரைத்துரையாகட்டும், பத்திரிகைத்துறையாகட்டும்.. தானாகவே ஒரு விறுவிறுப்பு தொற்றிக் கொள்ளும். ஒவ்வொரு செய்தியும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

தாத்தா,பாட்டி முதல் பேரன், பேத்தி வரை அத்தனை பேரையும் கவர்ந்திருக்கும் மந்திரச் சொல், ‘ரஜினி’

அவரை திறமையற்ற நடிகர் என்று விமரிசிக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ அவருடைய படங்கள் மாபெரும் வெற்றி பெருகின்றன. இன்றைக்கும் அவருடைய நூற்று சொச்ச திரைப்படங்களில் ஒரு நாட்டுக்கொரு நல்லவனோ, ஒரு பாபாவோ, ஒரு குசேலனோ தேடி எடுத்து தானே தோல்வியைச் சொல்ல வேண்டியிருக்கிறது. மக்களை மகிழ்விப்பவனே ஒரு திறமையான கலைஞன். அந்த விதத்தில் சந்தேகமேயில்லாமல் ரஜினி ஒரு மாபெரும் திறமைசாலி தான்!

வாழ்க்கைப் போராட்டத்தில் நொடிக்கு நொடி சிக்கி சீரழிந்து ஒரு இரண்டரை மணி நேரமாவது சந்தோஷமாக இருக்க மாட்டோமா என்று திரைப்படத்தைப் பார்க்கப் போகும் மனிதனை அங்கேயும் அதே புலம்பலைப் பாடி அழ வைப்பது தான் திறமை என்றால் அப்படிப்பட்ட திறமையை ரஜினிக்கு கொடுக்காததற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்!

தலைவரின் திரைப்படங்களில் லாஜிக் இல்லை என்று ரூம் போட்டு யோசித்து காரணம் கண்டு பிடிப்பவர்கள் சிலர்!

இருக்கட்டுமே. ‘லாஜிக் இல்லா மேஜிக்’ - இதான் ரஜினி சினிமா!

கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடந்த 30 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் ஒவ்வொரு முறையும் ரஜினியின் தாக்கம் இல்லாமல் இண்டஸ்ட்ரி வளரவே இல்லை என்று தாராளமாகச் சொல்லலாம்.

வில்லன் கதாநாயகனாக ஆகலாம் என்ற கூற்றை பரவலாக ஆக்கியது ரஜினியின் வரவிற்க்குப் பிறகு தான்.

ஹீரோ என்றால் கட்டுடல், வெண் நிறம், அழகு, சீரான தலை முடி என்றெல்லாம் இருந்ததை கலைத்துப் போட்டது ரஜினியின் வரவிற்க்குப் பிறகு தான்.

ஹீரோவே காமெடியும் செய்ய முடியும் என்று தொடர்ந்து பல படங்களில் வந்தது தலைவரின் வரவிற்க்குப் பிறகு தான்.

இதற்கு முன்பு பல நடிகர்கள் நேரடி அரசியலிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். ஆட்சியையெல்லாம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் நேரடி அரசியலில் ஈடுபடாமலேயே அரசியலுக்கு இவர் வந்து விடுவாரோ என்றும், வந்து விடப்போகிறாரே என்றும், வருவாரா மாட்டாரா என்றும் பலவாறு பேச்சு அடிபடுவது ரஜினி ஒருவருக்கு தான்!

“என் பேரு மாணிக்கம்.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு” என்று லேசான புன்முறுவலுடன் கையை ஊன்றி கண்ணைச் சுருக்கி பார்த்தவாறு ஆரம்பிக்கும் காட்சி தான், அதன் பிறகு வந்த பல திரைப்படங்களின் மைய இழை! அதே பாணியில் இன்று வரை எத்தனை எத்தனை திரைப்படங்கள்?!

”இந்த டயலாக்கை இவர் பேசினால் தான் எடுபடும்” என்று இருந்தாலும் புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனைக் குட்டிகளாய் வசனங்கள் வைத்துக் கொண்டு பாடாய்ப் படுத்தும் பல நடிகர்களுக்கு தெரியுமா இந்த நிலையை அடைய ரஜினி பட்டிருக்கிற கஷ்ட நஷ்டங்கள் எவ்வளவு என்று?

ஒரு ரஜினி சொன்னால் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள ஓடோடி வந்த குழந்தைகள், தாய்மார்கள் எத்தனை பேர்?

பெங்களூர் நகரப் பேருந்தில் விசிலடித்து வாழ்க்கையைத் தொடங்கிய சிவாஜி ராவ் கெய்குவாட்டுக்கு இன்று விசிலடித்து ரசிக்க கோடானு கோடி ரசிகர்கள் தமிழகம் தாண்டி வெளிநாடுகளிலும், மாற்று மொழி ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.

தமிழனாய், தமிழ்ப் பெண்ணை மணந்து, தமிழகத்தில் வாழ்ந்த்து, தமிழ் திரையுலகத்தினை மட்டுமில்லாமல் அதனை சார்ந்த அனைத்து ஊடகங்களையும் இன்றளவிலும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் நிஜ தமிழன், தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...