Wednesday, 11 December 2013

ஹாப்பி பர்த்டே தலைவா ...







ரஜினி கொடுத்த இரண்டு லட்சம்



ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ‘படையப்பா’ படத்துக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த படம். எதிர்பார்ப்புக்குப் கேட்க வேண்டுமா?

பல பத்திரிகைகளும் வரிந்து கட்டிக்கொண்டு எழுதிக் கொண்டிருந்தார்கள். அப்போது ‘குமுதம்’ இதழில் பொறுப்பாசிரியராய் இருந்தேன். குமுதம் சினிமாப் பகுதியின் இன்சார்ஜும் அப்போது நான்தான். குமுதம் சினிமா என்று தனியாக ஒரு இதழ் வெளியிடத் திட்டம் இருந்ததால், ஏழு சினிமா நிருபர்கள். ‘பாபா’ படம் பற்றிய பிரத்யேகத் தகவல்களை அள்ளி அள்ளி கொடுத்தோம்.

நன்றாக நினைவிருக்கிறது, ஒருமுறை எங்கள் நிருபர் ஒருவர் பாபா படத்தில் தொடர்புடைய ஒருவரிடம் ‘ஏதாவது லேட்டஸ்ட் டெவலப்மெண்ட் உண்டா?’ என்று கேட்பதற்காக போன் செய்தபோது, எதிர்முனைக்காரர் அவசரமாக போனை கட் செய்தார். சிறிதுநேரத்தில் அவரே லைனில் வந்தார்.

‘சாரோடு டிஸ்கஷனில் இருந்ததேன். அதான் பேச முடியலை…’ என்றவர், சில தகவல்களைக் கூறினார். அது, பாபா படத்தின் முதல் சண்டைக் காட்சி. அதில் ரஜினி வில்லன்களை நோக்கி நடந்து வருவது போன்று சாதாரணமாக எடுக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த டைரக்டர் ஷங்கர், ரஜினி சாரின் ஷூவிலிருந்து தீப்பொறி பறப்பதுபோல் கிராஃபிக்ஸ் செய்யலாம் என்று ஐடியா கொடுத்திருப்பதாகத் தகவல் கூறினார் அவர். இதுபோல் படத்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் அவ்வப்போது லைவாக வந்து கொண்டே இருந்தன. நாங்களும் தொடர்ந்து வெளியிட்டோம். அப்போது ரஜினி நடந்தாலும் செய்தி ; உட்கார்ந்தாலும் செய்தி!

ரஜினிக்கு ‘பாபா சினிமா…. சினிமா…’ பாடல் காட்சியில் தோள்பட்டை நழுவிவிட்டது. ரஜினியை யாரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷ் செய்ய தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு அவரும் விஷ் செய்வதால் அவருக்குக் கை வலிப்பதே காரணம் என்று சின்ன சின்ன தகவல்களைக் கூட, பாபா பக்கங்கள் என்று அதற்கென்று தனியாக பக்கங்களையே ஒதுக்கி வெளியிட்டோம். படத்தைப் பற்றி எந்தத் தகவல் கிடைத்தாலும் அதனை மிஸ் செய்யவே இல்லை.

குமுதம் ஒருபக்கம் என்றால், விகடனும் அசரவில்லை. தன் பங்குக்கு அவர்களும் படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். குமுதமும் விகடனும் போட்டி போட்டுக் கொண்டு தகவல்களை வெளியிட்டன. விகடன் பெங்களூருக்கே நிருபர்களை அனுப்பி ரஜினி, மனிஷா கொய்ராலா பைக் சவாரியைப் படம் எடுத்து ஸ்பெஷல் ஸ்டோரியே பண்ணியது. பாபா படம் சரிவரப் போகவில்லை. அதற்குக் காரணம், படத்தின் நம்பகத் தன்மையில்லாத கதைதான் என்றாலும் மீடியாக்கள் கொடுத்த ஓவர் பில்டப்பும் இதற்கு மிக முக்கியமான காரணம்.

‘பாபா’ படம் பூஜை போடப்பட்டபோது, ‘குமுதம் ரிப்போர்ட்டரில்’ பாபா பஞ்ச்’ என்கிற போட்டி வைத்தோம். அந்த ஐடியா என்னுடையது. ‘பாபா படத்தில் ரஜினி எந்த மாதிரி பஞ்ச் டயலாக்குகள் பேசுவார்? வாசகர்களே எழுதுங்கள். பஞ்ச்களை ரஜினியே தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புண்டு’ என்று அந்தப் போட்டிக்குச் சிறிய கமர்சியல் கவர்ச்சியும் கொடுத்தோம்.

கிட்டதட்ட 4000 வாசகர்களிடமிருந்து பஞ்ச் டயலாக்குகள் வந்து குவிந்தன. அவற்றில் நான் சுவையான ஐம்பது பஞ்ச்களை மட்டும் தேர்வு செய்தேன். அவற்றை கம்போஸ் செய்து, ‘அன்புள்ள ரஜினி சாருக்கு, இத்துடன் நாங்கள் அறிவித்த ‘பாபா பஞ்ச்’ போட்டிக்கு வாசகர்கள் எழுதியிருந்த பஞ்ச் டயலாக்குகளை இணைத்துள்ளோம். சிறந்தவற்றை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.’ என்று ஒரு கடிதம் தயாரித்துக் கொண்டோம். நானும் நிருபர் இரா. ரவிஷங்கரும் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குச் சென்று, ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் த. சத்யநாராணாவைச் சந்தித்துக் கடிதத்தையும் பஞ்ச் டயலாக்குகளையும் கொடுத்தோம்.

அவற்றை ரஜினி சாரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். கண்டிப்பாகச் சேர்ப்பிப்பதாகக் கூறினார் சத்யநாராயணா. பட டிஸ்கஷன், ஆர்ட்டிஸ்ட் தேர்வு போன்றவற்றில் பிஸியாக இருக்கும் ரஜினி இதனைக் கண்டுகொள்ளவா போகிறார் என்று எனக்கு முழு நம்பிக்கை இல்லை. அதேநேரம் முயற்சி செய்து பார்ப்போமே என்கிற முனைதல் அது.

கடிதம் கொடுத்து இரண்டு நாட்கள் கழிந்தது. நான் அதனை மறந்து என் கேபினில் ஒரு மேட்டரை எடிட் செய்து கொண்டிருந்தபோது, போன் மணி அடித்தது. எதிர்முனையில் ஒரு குரல் (அவர் பெயர் ஆறுமுகம் என்று நினைவு).
‘நாங்க ரஜினி சார் வீட்லேர்ந்து பேசறோம். சார் உங்கக்கிட்டே பேசணுமாம்….’ நான் லைனில் ஆவலுடன் காத்திருந்தபோது, லைன் இணைப்பு கட் ஆனது.

எனக்குப் படபடப்பு எகிறியது. போன் அருகிலேயே தவிப்புடன் காத்திருந்தேன். மீண்டும் தொலைபேசி அழைப்பு. முதல் ரிங் ஒலித்து முடிப்பதற்குள் பாய்ந்து எடுத்து காதுக்குக் கொடுத்தேன். சில விநாடிகள் இடைவெளியில் அந்தக் காந்தக் குரல்.

“நான் ரஜினி பேசுறேன்….” என்று எதிர்முனையில் கேட்ட காந்தக் குரலில் நான் திகைத்து, அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறி, “வணக்கம் அண்ணே…” என்று சொல்லி வைத்தேன். அந்த நிமிடத்தின் சந்தோஷம் சொல்லில் எழுத இயலாதது... அலுவல் பூர்வமான உரையாடல்களில் ‘சார்…’ என்று அழைப்பதுதான் முறையானதாகும். ‘அண்ணே’ என்பது என்னையும் அறியாமல் நாக்கில் வந்து உட்கார்ந்து கொண்ட வார்த்தை.

ரஜினி தன் ஸ்டைலில் படபடவென்று தொடர்ந்தார். “கருணாகரன்…. வாசகர் பஞ்ச் ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்தேன். ஒவ்வொரு வாசகரும் என் மீதான தங்கள் அன்பை பாசத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைத்துமே சூப்பர்ப். ரசிகர்களுக்கு நன்றி. ஆனால், இந்த பஞ்ச் டயலாக்களை நான் தேர்வு செய்வது சரியாக இருக்காதுன்னு நினைக்கிறேன். அது தேவையில்லாத யூகங்களுக்குத்தான் வழி வகுக்கும்.

அதனால் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கிட்டே சொல்லிவைக்கிறேன். படத்தின் இயக்குநரான அவர் செலக்ட் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்…” என்றார் ரஜினி.

“உங்கள் பேட்டி வேணும்ணா…” என்றேன்.

“ஹா… ஹா… இப்ப டிஸ்கஷன் போய்க்கிட்டிருக்கு. படத்தின் வேலையில் பிஸியாக இருக்கேன் கருணாகரன். இன்னொரு முறை பார்க்கலாம்…” என்றார்.

ரஜினி, தான் தேர்வு செய்ய வேண்டாம் என்று நினைத்திலும் ஒரு காரணம் இருக்கவே செய்தது. காரணம் வந்திருந்த பஞ்ச் டயலாக்குகளில் பல அரசியல் தொடர்பானவை. அவற்றை ரஜினி தேர்வு செய்திருந்தால் அவர் இன்னாரை ஆதரிக்கிறார் அல்லது எதிர்க்கிறார் என்கின்ற யூகங்களைக் கிளப்பிவிடும் என்பதால்தான் அந்தச் சூழலை அப்போது அவர் தவிர்த்தார் என்று நினைக்கிறேன்.

ஓட்டல் அருணாசலாவில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவைச் சந்தித்தேன். வாசகர்கள் எழுதிய அந்த பஞ்ச் டயலாக்குகளை மிகவும் பாராட்டினார். தொடர்ந்து முயன்றால் அவர்களில் பலர் சினிமாவில் பிரகாசிக்க முடியும் என்றார். நான் அவரிடம் சுமார் ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ‘பாட்ஷா’ ‘பாபா’ இரண்டுமே உச்சரிப்பில் ஒரே சாயலில் உள்ளனவே…. இரண்டு படங்களுக்கும் நீங்கள்தான் இயக்குநர். அப்படியென்றால், இந்தப் படத்திலும் ரஜினி சாருக்கு தாதா கேரக்டர் தானா?’ என்றேன்.

“தாதா கேரக்டர்தான். ஆனால், இது வேறு. இதுக்குமேல் அதைப் பற்றிப் பேச முடியாது. படத்தைப் பார்த்து மக்கள் தெரிந்து கொள்ளட்டும்….’ என்று சஸ்பென்ஸ் காட்டினார். பிறகு அவர் தேர்ந்தெடுத்த 21 பஞ்ச் டயலாக்குகளைக் கொடுத்தார்.

ஆபீஸ் வந்து சுரேஷ் கிருஷ்ணாவிடம் பேசியது, வெளியில் கேட்டது என்று பல விஷயங்களைச் சேர்த்து, ‘பாபா…. வெளிவராத ரகசியங்கள்’ என்று குமுதத்தில் கவர்ஸ்டோரி எழுதினோம். பிறகு, சுரேஷ் கிருஷ்ணா தேர்வு செய்த 21 பஞ்ச் டயலாக்களையும் ரிப்போர்ட்டர் இதழில் வெளியிட்டோம். அவற்றில் சூப்பர் பஞ்ச் என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து, வெளியிட்டோம். அந்த சூப்பர் பஞ்ச், ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாதான் வருவேன்...’

டயலாக்குகள் இடம்பெற்ற ரிப்போர்ட்டர் இதழ் வெளிவந்த அன்று மதியம் ஒரு போன். ‘பாபா’ படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் துரை பேசினார். ‘இஷ்யூவில் வெளிவந்திருக்கிற ஒவ்வொரு டயலாக்கும் ரஜினி சாருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால்...’ என்று கூறி நிறுத்தினார்.

‘அதனால்...? சொல்லுங்க சார்....’ என்று ஆர்வம் காட்டினேன்.

‘பாபா’ ஷூட்டிங் நடக்கிற கேம்ப கோலா வளாகத்துக்கு சாயங்காலம் வாங்க.... ஒரு சஸ்பென்ஸ்....’ என்று கூறிவிட்டு, போனைத் துண்டித்தார்.

தாங்க முடியாத ஆர்வத்தோடு, மாலையில் நானும் ரவிஷங்கரும் கேம்பகோலா வளாகத்துக்கு விரைந்தோம். காம்பவுண்டுக்கு வெளியே திருவிழாப்போல் மக்கள் கூட்டம். செக்யூரிட்டிகளின் பலத்த பாதுகாப்பு. பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி.

துரை ஏற்கெனவே கூறியிருந்ததால் நாங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். வளாகத்திற்குள் நுழைந்தது நமது வாகனம். நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிறச் சட்டையுடன் நம்மை வரவேற்றார் துரை.

‘என்ன சார் சஸ்பென்ஸ்?’ என்றேன் ஆவலாக.

‘பஞ்ச் எழுதிய ஒவ்வொரு வாசகருக்கும் ரஜினி சார் சிறப்புப் பரிசாக பத்தாயிரம் ரூபாய் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். இருபத்தொரு வாசகருக்கும் தலா பத்தாயிரம் வீதம் மொத்தம் இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் பரிசு. அதற்கான டிமாண்ட் டிராஃப்ட்கள் இதோ...’ அவரது படக் கம்பெனியான ‘லோட்டஸ் இன்டர் நேஷனல்’ முகவரியிட்ட கவர்களில் டி.டி.களை வைத்து என்னிடம் ஒப்படைத்தார். வாசகர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்தேன்.

‘அதுமட்டுமல்ல. ஒவ்வொரு வாசகருக்கும் அவர் தன் லெட்டர் ஹெட்டில் ‘நீங்கள் எழுதிய ‘பாபா பஞ்ச்’ மிக அருமை. அதைப் படத்தில் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கிறேன். தாங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் அபிமானத்திற்கும் நன்றி’ என்று எழுதி, கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்...’ என்று கூறிய துரை, ரஜினி சார் எழுதிய அந்தக் கடிதங்களையும் என்னிடம் ஒப்படைத்தார்.

‘சார்... இதையெல்லாம் ரஜினி சாரே தன் கைப்பட வாசகர்களுக்கு கொடுத்தால் ஹைலைட்டாக இருக்குமே....’ என்றேன்.

‘அவர் படத்தில் முழு கவனமாக இருக்கிறார். அதனால், அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாமே...’ என்றார் பொறுப்புள்ள நிர்வாகத் தயாரிப்பாளராக.

பரிசு பெற்ற ரஜினி ரசிகர்களைச் சந்தித்து அவர்களது பேட்டிகளையும் வெளியிடலாம் என்று நினைத்து, எங்கள் செய்தியாளர்களை மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பியபோது, ஒரு நெகிழ்ச்சியான உண்மை புரிந்தது. டயலாக்குகள் எழுதிய பலரும் அடித்தட்டு மக்கள். நடுத்தர வர்க்கம். ஆட்டோ டிரைவர், சர்வர், நடைபாதை கடை வியாபாரி, மளிகைக்கடைக் கூலி என்று பல்வேறு ரகத்தினர். இவர்கள் பரிசுப் பணத்தைத் தங்கள் வாழ்க்கைத் தேவைக்காகவும் மகனின் உயர் கல்விக்காவும் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகச் சொன்னபோது, மிகவும் மனம் மகிழ்ந்தேன். மூன்று டயலாக்குகளை எழுதி முப்பதாயிரம் பரிசு பெற்ற நடைபாதைக் கடை வியாபாரியான பெரம்பூர் வாசகர் அப்துல் ரஹ்மான் அந்தப் பணத்தை முழுவதுமாக தனது பிசினஸில் இறக்கித் தனது பிசினஸை விரிவுபடுத்தினார். அவரைச் சந்தித்தபோது, அவரும் அவரது மனைவியும் கண் கலங்கினர்.

பட ஷூட்டிங் முடிந்தபிறகு வைத்த பிரஸ் மீட்டில் ரஜினி, ‘பாபா பஞ்ச்’ போட்டியைப் பற்றி குறிப்பிட்டதுடன் அவற்றில் சில டயலாக்குளைப் படத்தில் பயன்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
படத்தில் பயன்படுத்தப்பட்ட சில டயலாக்கள்

1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்

2. பாம் போட்டால்தான் வெடிக்கும். இந்த பாபா சொன்னாலே வெடிக்கும்

3. நான் ஒதுங்கினா ஒன்பது அர்த்தம் இருக்கும்.
இறங்கினா எண்பது அர்த்தம் இருக்கும்

4. நாம நினைச்சதெல்லாம் நடக்காது.
நல்லதை நினைச்சால் நடக்காம இருக்காது.

5. நான் வரவேண்டிய நேரம் வந்துடுச்சி.
நீ போக வேண்டிய நேரம் நெருங்கிடுச்சி

6. இந்த பாபாவுக்கு கால்ல விழறவனையும் பிடிக்காது.
காலை வார்றவனையும் பிடிக்காது.

7. பாபாவுக்கு சீட்டு கொடுக்கவும் தெரியும்.
சீட்டைக் கிழிக்கவும் தெரியும்

8. நான் எந்தப் பக்கமும் சாயாத பாபா

9. நான் நினைச்சா சொன்ன மாதிரி.
சொல்லிட்டா முடிஞ்ச மாதிரி

‘பாபா’ படம் என்றென்றும் நினைவுப் பெட்டகத்தில், நிறைந்து கிடக்கும் வைரப் பொக்கிஷம்!

Thanks : Kumutham Reporter Aarumugam...