நாமெல்லாம் வாழ்க்கையை ரசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு கணமும் வாழ்க்கையில் போராடுபவர்கள் நம்மை சுற்றி எண்ணற்றோர் உள்ளனர். அந்த வகையில் நாமெல்லாம் கொடுத்துவைத்தவர்கள். முதலில் இறைவனுக்கு அதற்காக நன்றி சொல்வோம்.
நோய், விபத்து, போர் என்று நம்மை சுற்றி அன்றாடம் பாதிக்கப்படும் ஜீவன்கள் எத்தனையோ பேர் உள்ளனர். இப்படி போராடுபவர்களுக்கு இந்த புத்தாண்டு முதல் நம்மால் இயன்ற சிறிய உதவி ஏதேனும் செய்ய உறுதி ஏற்போம். அள்ளிக்கொடுக்கவேண்டாம். கிள்ளிக்கொடுத்தால் கூட போதும். சிறு துளி பெருவெள்ளமாகி சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்குமே?
டெல்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக நாடே கொந்தளித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலையில், நம் தமிழகத்தில் பட்டு துளிர்க்க வேண்டிய ஒரு பூச்செடி ஒரு பாதகனின் செயலால் கருகிவிட்டது ஏனோ ஊடகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை.
சென்ற மாதம் (நவம்பர் 14) நடைபெற்ற இந்த கொடூர சம்பவம்… தற்போது அனைவராலும் மறக்கப்பட்டே விட்டது.
முதலில் செய்தித் தாளில் இந்த செய்தியை பார்த்தபோது இதன் தீவிரத்தை நான் அறிந்திருந்தாலும் தற்போது தான் (தாமதமாக) முழுமையாக உணர்ந்துகொண்டேன்.
ஒருதலைக் காதலாக தம்மை காதலித்த ஒரு வாலிபரின் காதுலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆசிட் வீசப்பட்டு இரண்டு கண்களை இழந்து தவிக்கும் சாப்ட்வர் என்ஜினியர் வினோதினி தற்போது, மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார். வினோதினியின் உறவினர்கள் தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த ஜெயபாலன் என்பவரின் மகள் வினோதினி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் காரைக்காலை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் என்பவர் வினோதினியை காதலித்துள்ளார். ஆனால் வினோதினி அவரது காதலை ஏற்க மறுத்துவீட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கடந்த 14ஆம் தேதி காரைக்கால் பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த வினோதினி மீது ஆசிட் வீசினார்.
முகம், உடலில் பல பகுதிகள் வெந்த நிலையில் வினோதினி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீக்காயதுறை தலைவர் டாக்டர் ஜெயராமன் தலைமையில் மருத்துவ குழுவினர் வினோதினிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆனால் மருத்துவர்களால் வினோதினியின் இரு கண்களின் பார்வையை குணப்படுத்த முடியாமல் போய்விட்டது. இரண்டு கண்களும் எரிந்துவிட்டதால் வினோதினி பார்வை பறிபோய் விட்டது. தொடையில் உள்ள சதையை வெட்டி எடுத்து முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. கண்களும் சதையால் தைத்து மூடப்பட்டுள்ளது.
திரவ உணவு மட்டும் டியூப் மூலம் வினோதினிக்கு வழங்கப்படுகிறது. நினைவு வரும் நேரத்தில், “எனக்கு கண்ணே தெரியவில்லையே. எப்படி வாழப்போகிறேன்? என்னை ஏன் காப்பாத்த பார்க்கிறீங்க?” என்று வினோதினி புலம்புவதை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர் வடிக்கின்றனர்.
செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் வினோதினியின் தந்தை, மகளின் மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வருகிறார். உதவி கரம் நீட்டும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயபாலன் பெயரில் கீழ்ப்பாக்கம் இந்தியன் வங்கி கிளையில் ஒரு வங்கி கணக்கு தொடங்கி இருக்கிறார்கள். உதவி செய்ய விரும்புபவர்கள் நேரடியாக கீழே தரப்பட்டுள்ள அவர்களின் வங்கிக் கணக்கிற்கு பண உதவி செய்யலாம்.
நம் தள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற அளவிற்கு ஏதாவது பொருளுதவியை இந்த திக்கற்று நிற்கும் குடும்பத்தினருக்கு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இறைவனுக்கு செய்யும் சேவையைவிட துன்பத்தில் இருப்பவரின் கண்ணீரை துடைப்பது மேலானது. அவசியமானது. அவசரமானது.
இதைப் படித்துவிட்டு உங்களில் எவரேனும் ஒருவர் இவர் குடும்பத்திற்கு உதவி செய்தால் கூட எனக்கு மகிழ்ச்சியே.
V. Jayabalan,
Indian bank
A/c no 603899558
IFSC Code – IDIB000K037
Thanks To onlysuperstar.com Sundar sir..
IFSC Code – IDIB000K037
Thanks To onlysuperstar.com Sundar sir..